அவசரமாக சாலை கடந்த நேரம்
அடிபட்டுத் துடிக்கும் நாயைப் பார்க்கையில்
உடல் நடுங்க சாலையைக் கடக்க
துணைக் கையை எதிர்பார்க்கும்
மூதாட்டியைப் பார்க்கையில்
பச்சை விளக்கு எரியும் முன்பே
அவசர கதியில் முந்திப் போகும்
கார்களைப் பார்க்கையில்
நீள் கம்பி வெளியில் சரிந்து
கூர் முனையில் பெயருக்கு
சிவப்புத் துணி எச்சரிக்கைப் பறக்க
அசைந்தாடிச் செல்லும் முச்சக்கர
வண்டியைப் பார்க்கையில்
இடப் பக்கம் இண்டிகேட்டர் போட்டு
வலப் பக்கம் கை காட்டி
நேராக விரைந்தோடும்
புல்லட் புலிகளைப் பார்க்கையில்
கருப்பு நிலவில் கால் பதித்தது போல்
நான்கு சக்கரங்களும் குதித்து குதித்து
குண்டும் குழியுமான தார் ரோட்டில்
தத்துவதைப் பார்க்கையில்
எரிச்சலுடன் கண் சுருக்கி உதடு சுழித்து
பல் கடித்து
கேட்கத் தோன்றியது...
“யாராவது இதற்கு ஒரு முடிவு கட்டக் கூடாதா?”
அலுத்துக் களைத்து வீடு வந்து, சோர்ந்து
பசி கிள்ளும் வயிற்றுக்கு எனக்கு நானே
சுடு சோறு இட்டுக் கொள்கையில்
தோன்றவே இல்லை இந்த “ யாராவது” ஆதங்கம்...
Saturday, February 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment