Saturday, August 13, 2011

யோசித்தவனும் யாசித்தவனும்.....

முன் மாலை பொழுது - அது
கவிஞனுக்கான பொன் மாலைப் பொழுது
வானம் தன் பூமிக் காதலிக்குத் தரும்
முத்த மழைக்கு பயந்து
எல்லோரும் வீட்டினுள் ஒளிந்திருக்க

நான் மட்டும் பூங்காவில் மரக்குடையின் கீழ்
எஞ்சிவிழும் மழை முத்தம் என் மேலும்
சில சிதறட்டுமே என்று கவிதை தாகத்தோடு
வார்த்தை நீரைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

இயற்கையின் இறகுகளில் பறந்து
இரண்டொரு வரிகளை என்
விரல்கள் வரித்திருக்க- முடிவுரை
தேடி முட்டி நின்ற எண்ணங்களுக்கு நடுவே

அபஸ்வரமாய் ஒரு குரல்
" ஐயா! பசிக்குது காசு கொடுங்க"
சட்டென்று தடைபட்ட எண்ணத்தோடும்
சுள்ளென்ற கோபத்தோடும்- எழுதிய
காகிதத்தை கசக்கி எறிந்துவிட்டு

அடுத்த மரம் தேடி என் கவிதைக்கு
வார்தைகளை யோசித்திருந்தேன்....
மறுபடியும் அதே குரல்
யாசித்தவன் கையில் கசங்கிய காகிதம்
என் கவிதைக்கான முடிவுரையோடு

"செவிக்கு உணவில்லாத போது
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"
"இயற்கையின் அதிசயங்களில் பசிகளும்
மறந்து போகும்"
சரிதான் ஐயா!....

இங்கே மூன்று நாள் பட்டினியில்
இரப்பையின் இரைச்சலில் இயற்கையின்
இசைகளும் என்னைப் பொறுத்தவரை
இரண்டாம் பட்சம் தான்....

"நீங்கள் இயற்கையை ரசித்து வாழும் ஜாதி
நாங்கள் இயற்கையை புசித்து வாழும் ஜாதி"

No comments: