Friday, February 17, 2012

அவன் கண் நீர் அஞ்சலி....














இருளையும் இரவையும் தன் முள் நகர்த்தி
அளந்து கொண்டிருந்தது டிக்கிட்ட கடிகாரம்

மன அந்தகாரத்தையும் விகாரத்தையும்
அழித்துக் கொண்டிருந்தது தடக்கிட்ட
அவன் இதயம்..

கடவுளைப் போல எங்கும் இருக்கும்
சில்வண்டின் ரீங்காரமும்
மூங்கைலைக் கொத்திச் சென்ற
ஊதல் காத்தும்
ரகசியம் பேசி சலசலத்துக் கொண்டிருந்த
அரசமரத்து இலைகளும்
அசைவற்ற அவனைக் கண்டு
ஒரு நொடி அடங்கித்தான் போயின...

நிலவின் மௌனத்தில் கல்
எறிந்து கொண்டிருந்தது
பொருளற்ற மாயச் சொற்களை
முனகிக் கொண்டிருந்த அவன் மனது

மனிதனாயும் இல்லாமல் மிருகமாயும் இல்லாமல்
மனித மிருகமானதொரு நிலைக்குத்
தள்ளப்பட்டிருந்தான் அவன்...

குத்தும் போது மிருகமாய்
குருதி கண்டு மனிதானாய் துடித்து

ஒரு நொடி புத்தனை தூங்க வைத்த அரக்கனாய்
மறு நொடி விழித்திருந்த அரக்கனைக்
கொன்றுவிட்ட புத்தனாய்
துவந்தமாகி போயிருந்தது அவனின்
ஆறாம் அறிவு...

இனம் புரியாததொரு துயரத்தின்
பிடியில் சிக்கி முனகிக் கொண்டிருந்தது
அவன் உயிர்...

அவனை மட்டுமே உணர்ந்த
அவனது கண்ணீர்த் துளிகள்
அஞ்சலி செய்து கொண்டிருந்தது
அவனறியாமலேயே

நேற்று இருந்த அவளுக்கும்
இன்று இறந்துவிட்டிருந்த அவனின்
நாளைக்கும்

No comments: