Sunday, December 12, 2010

உற‌வின் மீட்சியாய்....












அனிச்சையாக உள் நுழைந்து
அதிர்வுகளை ஏற்படுத்தும்
வார்த்தகைகள் மறைத்த உன்
மயக்கும் மௌனங்கள்...

உனக்கு என் மீதும் எனக்கு உன் மீதும்
இருந்ததும் இருப்பதும்
காதலா?!.. காமமா?!.. போதயா?!...

காமமும் போதையும் மீளக்கூடியவை
ஆனால் காதல்?...

உனைப்பற்றிய அநேக எழுத்துக்கள்
இரவில் ஒரு காதலாய் ஒரு தவமாய்
ஒரு யாகமாய் மனதுள்ளேயே
வார்த்தைகளாகி வாக்கியமாகி பின்
விடியலில் காணாமலும் போகிறது
படிக்கப் படாத கவிதையாய்
பிரிக்கப் படாத புத்தகமாய்

மௌனங்கள் பேசிய நம்
உறவின் மீட்சியாய் பிறக்கிறது
என் வரிகளின் நீட்சி....

Monday, December 6, 2010

சாலையோரம்...

வெளியில் அடை மழை
என்னுள் வெப்பம் ‍_ சூரியனாய் நீ...

மழை நனைத்த சாலையில்
உனை அணைத்து நடக்கையில்
ஈரம் குளித்த சாலையோரப் பூக்கள்
தலை சாய்த்து கேட்கிறது
உன் குளிர் வெப்பம் தானும் பெற..

நீர்த்துளி இலைகளின் தலை
துவட்டிக் கிளம்பிய தென்றல்
மூச்சு முட்டி நிற்கிறது
நம் இருவருக்கும் நடுவே
நுழைந்து செல்ல முடியாமல்...

உனை நோக்கும் நொடிப் பொழுதில்
பட படக்கும் என் இமைகள் கண்டு
'கூட்டத்தில் தவறிய குஞ்சுகளென‌
கூட்டிப் போக வருகிறது தாய்க் குருவி...

உதிரும் மழைச் சரங்கள்
உன் முத்தத்தால் மூழ்கிய‌
என் கன்ன‌க் குழிகளை
நிரப்ப முடியாமல்
உருண்டோடி மண் சேர்கிறது...

இத்தனையும் ரசித்துக் கொண்டே
நீ இறுக்கிய இறுமாப்பில்
தொடர்ந்து செல்கிறேன்
என் கனவுச் சாலைகளில்....

Wednesday, November 24, 2010

சௌகரியமான....

சகிப்புகள் எல்லாம் சம்மதித்தல் இல்லை
அனுமதி எல்லாம் அங்கீகரித்தலும் இல்லை

அசௌகரியமான உண்மைகளை விட
சௌகரியம் தரும் பொய்கள்
அனிச்சையாய் ஏற்புடையதாகிறது

ஒத்துக் கொள்ளக் கடினமாயினும்
தியாகங்கள் பலவும் சுயநலங்களே...

ஏதோ ஒரு நம் சௌகரியம் கருதி
இல்லை, பாராட்டுக்கு முற்பட்டு...

புகழ் மயக்கத்தில் புழுங்கும் சுயங்கள்
சுயம் எரித்த நலங்கள்
(அ)
நலம் அணைத்த சுயங்கள் யாவும்
சலுகையின் வெளிப்பாடுகள்

சலவை ஆடைக்குள் கசங்கிய மனங்கள்
சுருக்கம் நீக்கிப் பார்ப்பின்
நிறைந்திருக்கும் பொத்தல்கள்....

Thursday, October 28, 2010

ஈர்ப்பு....



உனக்காகப் படைக்கப் படும் என்
ஒவ்வொரு வரிகளும்
எனக்கான உன் கவன ஈர்ப்பை
மையம் கொண்டே....

சிதறும் உன் சிந்தனைகளின்
நினைவுச் செல்களை எனை நோக்கி
செல்லாமாக திருப்பும் சிறு முயற்சி....

உட‌ல் சாரும் ஈர்ப்புக‌ள்
வ‌ய‌து தின்னும் ம‌ட்டும்...
உயிர் சாரும் ஈர்ப்புக‌ள்
ம‌ண் தின்னும் ம‌ட்டும்

ந‌மைச் சேறும் முதுமையிலும்
மூன்றாம் கால் தேவையிலும்
கை அழுத்தி தோள் கொடுக்கும்
க‌ம்பீர‌த் தோழ‌மை உன‌தாகும் வேளையிலும்...

தொட‌ர்ந்து கொண்டே இருக்கும்
என்னின் இந்த‌ க‌வ‌ன‌ ஈர்ப்பு....

Wednesday, September 29, 2010

நாடகம்...

வளைந்து கொடுப்பது விட்டுக் கொடுப்பது
இரண்டும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தின்
இயலாமை மேல் பூசப்பட்ட‌
பண்புப் பூச்சு...

மனம் சாராத நம் வளைதலை விட‌
நிஜம் உணர்த்தி பிறரின் நிமிர்த்தலே மேலானது

வாழ்க்கைப் புத்தகத்தில் பிரித்த பக்கங்களைவிட‌
படிக்கப் படாத பக்கங்களே அதிகம்

அடுத்தவர் நிர்வாணம் கலையாகும் வேளையில்
சுய நிர்வாணம் கேவலமாகிறது..

சுய அழுக்குப் போக்குவதை விட
அழுக்கு மறைக்கும் ஒப்பனைக் கூட்டலே
கலாச்சாரமாகிவிட்டது...

இங்கே தற்கொலை தியாகமாகிறது
கொலை வீரமாகிறது...

நாடகம் அறிந்து நடிப்பு தெரிந்து
நம்முள் " நான்" மட்டும்
புரியாமல் புதிராய் தொடர்கிறது
சுவைக்க‌ முடியாத‌ சுக‌ங்க‌ள் த‌ந்த‌
சுமையுட‌ன் மீதி நாட‌க‌மும்....

Friday, September 17, 2010

முர‌ண்ப‌ட்ட‌ நியாய‌ங்க‌ள்...

அடகு வைக்கப் பட்ட மூளையின்
எஞ்சிய துளிகளின் துருக்களை
சுரண்டிவிட்டு யோசித்துப் பார்க்கிறேன்...
ந‌டைமுறையில் முர‌ண்ப‌ட்ட‌ சில‌ நியாய‌ங்க‌ளை...

நாளைக்காக‌ இழ்ந்து விடுகிறோம்
ந‌ம்முடைய‌ "இன்றை"

எதிர்கால‌ சேமிப்புக்காக‌ செல‌வாகிற‌து
நிக‌ழ்கால‌ ச‌ந்தோஷ‌மும்
இற‌ந்த‌கால‌ நினைவு அசைக‌ளும்...

க‌டிகார‌ முள்ளை விட‌ வேக‌மாக‌ ஓடி
நேர‌த்தில் ஜெயித்து, கால‌த்தில்
கோட்டை விட்ட‌ வெற்றிக‌ள் ஏராள‌ம்...

மிருக‌வ‌தை காட்டுமிராண்டித்த‌ன‌ம் என‌ப் பேசி
போர்க்க‌ள‌ம் எனும் பேரால்
ம‌னித‌வ‌தை செய்யும் காட்டுமிராண்டிக‌ள் நாம்...

ம‌னித‌ப் பிண‌ங்களில் மேடை க‌ட்டி
ம‌னித‌ம் ப‌ற்றிய‌ பிர‌ச்சார‌ங்க‌ள்...

காத‌லுக்கு ம‌றியாதை‍.
ந‌ம் வீட்டுப் பெண் ஓடிப் போகாத‌வ‌ரை...

ஒழுக்க‌ மீற‌லும் ஒத்துக் கொள்ள‌ப் ப‌டும்
பிற‌ன் தன் ம‌ணை நோக்காத‌ வ‌ரை....

வீனாக‌ப் போனாலும் உண‌வு ‍_ காசில்லாது
வெறுமெனே போகாது ஏழைக‌ளின் வ‌யிற்றுக்கு...

காசில்லாம‌ல் ப‌ட்டினி கிட‌ப்போரை விட‌
நேர‌மின்மையால் ப‌ட்டினி கிட‌ப்போர்
எண்ணிக்கை இங்கே அதிக‌ம்...

இத்த‌னையும் எழுதிவிட்டு
நேற்று எறும்பு ஊர்ந்த‌த‌ற்காய்
இன்று இட‌ம் மாற்றி வைக்கிறேன் டப்பாவை

" க‌ச‌ந்துதான் போன‌து என் வீட்டுச் ச‌க்க‌ரையும்..."

Tuesday, September 7, 2010

நீரில் இடும் கோலங்கள்....

இனிய நட்புகளுக்கு

இந்தக் கவிதை திரு. ஒட்டக்கூத்தன் அவர்கள் நடத்திய போட்டியில் பரிசு வென்றிருக்கிறது என்பதை மிக மகிழ்சியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வாய்பளித்து பரிசும் தந்தமைக்கு மிக நன்றி நண்பர் ஒட்டக்கூத்தரே...

கீழ்க்காணும் வலைதளத்தில் விபரம் காணலாம்..
otakoothan.blogspot.com and Re: ஓர் இனிய கவிதை போட்டி.

காற்றின் ஏதோ ஒரு அளாவளில்

மலர்ந்த மொட்டுகள் போல

நிலவின் ஏதோ ஒரு கிரணம் தொட்டு

உயர்ந்தெழுந்த அலைகள் போல

மழையின் ஏதோ ஒரு துளி உள் வாங்கி

முத்தெடுத்த சிப்பி போல

உன்னின் எந்த அலை என் மேகம்

நனைத்துச் சென்றது?...

கருக்கள் தாங்கி நிற்கும் கருவரைக் காட்டிலும்

உன் ஒற்றைக் காதல் மட்டும்

சுமந்து நிற்கும் என் இதயம் தனித்துவமானது...

இரவில் விழுந்த நிழலாய்

நீரில் இட்ட கோலமாய்

தடயங்களற்ற தடம் பதித்துச்

சென்றது உன் காதல்...