Thursday, June 28, 2012

முழுமையாய்...













நீ முழுமையானவன்
உனதான அனைத்தையும்
என்னிடம் கொடுத்தபின்னும்
நீ முழுமையாகவே இருக்கிறாய்...

கிணறு...











உடைந்த குடம்
ஒன்றாகிவிட்டிருந்தது
நீர்...

Tuesday, June 26, 2012

இருளில்...













விளக்கற்று என் கைகள்
எரியும் விளக்காக
நீ...

சொல்லாமலே...














சொல்லாமல் அடக்கி
வைத்த சொற்கள் எல்லாம்
தொண்டைக் குழியில் புதைந்து பாராமாகி
நெஞ்சை அழுத்துகிறது...

சேர்த்து வைத்த வார்த்தைகள்
செல்லாத காசாய் துரு பிடித்து
இதயத்தை அறுக்கிறது...

நான் விட்டுச் சென்றால்
நீ என்ன செய்வாய்??..
விளையாட்டாய் நீ கேட்ட அன்றே
நான் சொல்லியிருக்க வேண்டுமோ?!..

சத்தியமாய் வாழ்வேன் உயிரற்று என...

Sunday, June 24, 2012

கண்டதும்??... கண்டதும்!!!...













கவிதை எழுத வேண்டும் அவனுக்கு
நாளை பத்திரிக்கையின் அச்சில்
அவனது வரிகள் கோர்க்கப் படவேண்டும்

அவன் மனம் கவிதைக்கான கருவைச் சுற்றி
தெரிந்த வார்த்தைகளுடனும்
தெரியாத மொழிகளுடனும்
வட்டமிட்டுக் கொண்டிருந்தது..

சுழலும் மின்விசிறியின்
அலுமினிய இறகுகளின் சுற்றி சுழன்று
ஜன்னல் கம்பிகளில்
வௌவ்வாலாய்த் தொங்கி
ஒட்டடையின் அடுக்குகளில் மாட்டிக் கொண்ட
ஈயாய் சிக்கித் தவித்து
மூச்சு முட்டி

பின் சடக்கென பறந்தது அவன்
அரூப உடல் சுமந்து

நடை பாதை ஓரத்தில்
நடந்து கொண்டிருந்த
நாயின் புனர்வில் நிமிடம் போல் தங்கி

வண்டிக்காரன் பெண்டாட்டியின்
ஆடை விலகலை
சில நிமிடம் ரசித்து விட்டு

எதிர் வீட்டுச் சிறுமியின்
அந்தரங்கம் தொட்டுவிட்டு

அடுத்த வீட்டின் படுக்கை அறையினை
திருட்டுத் தனமாய் எட்டிப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சுடன் திரும்பி

தானே அவையாகவும்
அவைகளே தானாகவும்
கற்பனையில் திளைத்துக் களைத்துத்
திரும்பி வந்து

பேனா முனையில்
ஓய்வெடுத்து மூச்சு வாங்க...

இறுதியில் இந்து மதக் கோட்பாடும்
புத்தனின் போதனையும்
எழுதத் தொடங்கிய நேரம்

கவிதை தானாகவே தன்னை
அழித்துக் கொள்ள ஆரம்பித்தது....

Saturday, June 23, 2012

இருந்தும்...
















எந்தக் கடவுளை வேண்டி
உனைத் திரும்பப் பெறுவேன்
எதை விட நேர்ந்து கொண்டு
உனை மறுபடி அடைவேன்..

கடவுளுக்கும் காதலுக்கும்
அப்பாற் பட்டு இருக்கிறாய்
உறவுக்கும் உரிமைக்கும்
எட்டாமல் இருக்கிறாய்...

பிரிவையும் பிரியங்களையும்
நூல் நுணியில்
ஊசலாட வைக்கிறாய்...
தள்ளி நின்று
உயிர் கொண்ட உறவுக்கு தாளிடுகிறாய்...

நீராக மாறி என் தாகங்களைப் பருகுகிறாய்
மோகங்கள் எரித்துவிட்ட என் மௌனத்துள்
மோன யுத்தம் செய்கிறாய்...

நேர்கோடாய் இருந்த என்னை
வட்டமாக மாற்றிவிட்டு
நினைவுகளை உனை நோக்கி மட்டுமே
சுழற்றியடிக்கிறாய்...

சுழலில் எனை சுற்றவிட்டு
எட்ட நின்று நிபந்தனைகள் விதிக்கிறாய்
உன் கண் அசைவில்
என் தலை ஆடச் செய்கிறாய்...

இருந்தும்...
இனி என்ன செய்து
உனைத் திரும்பப் பெறுவேன்...

Monday, June 18, 2012

முரண்...












இலையின் அடிப் பரப்பில்
கூட்டுக்குள் இருந்ததைப் பார்த்து
உவ்வேக் ச்ச்சீய் புழு
என்றவள் ஓடினாள்
வண்ணத்துப் பூச்சியைப்
பிடிப்பதற்கு...