Sunday, June 24, 2012
கண்டதும்??... கண்டதும்!!!...
கவிதை எழுத வேண்டும் அவனுக்கு
நாளை பத்திரிக்கையின் அச்சில்
அவனது வரிகள் கோர்க்கப் படவேண்டும்
அவன் மனம் கவிதைக்கான கருவைச் சுற்றி
தெரிந்த வார்த்தைகளுடனும்
தெரியாத மொழிகளுடனும்
வட்டமிட்டுக் கொண்டிருந்தது..
சுழலும் மின்விசிறியின்
அலுமினிய இறகுகளின் சுற்றி சுழன்று
ஜன்னல் கம்பிகளில்
வௌவ்வாலாய்த் தொங்கி
ஒட்டடையின் அடுக்குகளில் மாட்டிக் கொண்ட
ஈயாய் சிக்கித் தவித்து
மூச்சு முட்டி
பின் சடக்கென பறந்தது அவன்
அரூப உடல் சுமந்து
நடை பாதை ஓரத்தில்
நடந்து கொண்டிருந்த
நாயின் புனர்வில் நிமிடம் போல் தங்கி
வண்டிக்காரன் பெண்டாட்டியின்
ஆடை விலகலை
சில நிமிடம் ரசித்து விட்டு
எதிர் வீட்டுச் சிறுமியின்
அந்தரங்கம் தொட்டுவிட்டு
அடுத்த வீட்டின் படுக்கை அறையினை
திருட்டுத் தனமாய் எட்டிப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சுடன் திரும்பி
தானே அவையாகவும்
அவைகளே தானாகவும்
கற்பனையில் திளைத்துக் களைத்துத்
திரும்பி வந்து
பேனா முனையில்
ஓய்வெடுத்து மூச்சு வாங்க...
இறுதியில் இந்து மதக் கோட்பாடும்
புத்தனின் போதனையும்
எழுதத் தொடங்கிய நேரம்
கவிதை தானாகவே தன்னை
அழித்துக் கொள்ள ஆரம்பித்தது....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment