Wednesday, June 6, 2012

போன்சாய் காடு...












தனித்தே விளையாடிப் பழகிய சிறுவன்
தனக்கென விளையாட ஒரு
காட்டை சித்தரித்தான்
போன்சாய் மரங்களுடனும்
போன்சாய் விலங்குகளுடனும்

வானுயரும் சில்வர் ஓக்கும்
தேகம் விரிக்கும் தேக்கு மரமும்
விரிந்து பரந்த ஆலமரமும்
புத்தன் நிரைத்த போதி மரமும்
தன் உருவம் குறுக்கி போன்சாயாக
சிறுவனின் காட்டுக்குள்
சாமரம் வீசிக்கொண்டிருந்தது

கழுத்து நீண்ட ஒட்டகச் சிவிங்கியும்
காட்டுக்கே ராஜா சிலிர்த்த சிங்கமும்
தாவி ஒடும் புள்ளி மானும்
கவ்விப் பிடிக்கும் சிறுத்தைப்புலியும்
வகை வகையாய் பிற மிருகங்களும்
தன் சுயத்தை அடக்கி சிறிய உருவில்
துள்ளித் திரிந்தன சிறுவன் காட்டில்

பார்த்துப் பார்த்துக் களித்த சிறுவன்
சற்றே சலிப்புற மாற்றம் வேண்டி
மனிதனை காட்டுக்குள்
இறக்கினான் போன்சாயாக

சுற்றி சுற்றிப் பார்த்த மனிதன்
அங்கும் இங்கும் அலைந்த மனிதன்
சிற்றுருவம் பார்த்துச் சினுங்கிய மனிதன்
தன் பசி தான் தீர்க்க வேண்டி
பிடித்துக் கடித்தான் போன்சாய் முயலை

கடித்தவுடன் கைகள் வளர
அடித்துத் தின்றான் போன்சாய் மானை
அடிக்கக் கடிக்கக் அவன் உருவம் வளர
அதிர்ச்சி காட்டின போன்சாய் உயிர்கள்

புல்லைப் பிய்த்த மானும் வளர
மானை அடித்த புலியும் வளர
ஒட்டகம் பிடித்த சிங்கமும் பெருக்க
மரத்தின் வேர்கள் நகர்ந்து
அடுத்ததை உரிஞ்ச

போன்சாய் காடு ஆனது மிகையாய்
போன்சாய் மிருகங்கள் ஆனது பெரிதாய்
மனிதன் காட்டிய வழியைப் பிடித்து
குறுக்கே ஓடிய அவனை வதைத்து
அனைத்தும் ஓடின வெளியே குதித்து

மறுபடி சிறுவன் தனியனானான்
போன்சாய் பிணத்தை வெறிக்கலானான்..

No comments: