Monday, August 29, 2011

என் செல்லமே....











மழை பெய்யும் நாட்களில் எல்லாம்
நான் செய்து கொடுக்கும்
காகிதக் கப்பலுக்காய்
என் கன்னத்தில் உன் முத்தத்தின் ஈரம்
மழைத்துளியைவிட குளிர்ச்சியாய்....

கண்ணெதிரே கொடியில் காயும்
என் புடவையின் பின்னே ஒளிந்து
அம்மா!.. என்னைக் கண்டுபிடி....
அழைக்கும் உன் குரல்
தேனைவிட இனிமையாய்...

வீடு வந்து சேரும் முன்பே
உன் மிச் குட் சொல்லி
கையில் ஸ்டார் போட்ட கதையையும்
ரோஷினி கன்னத்தை நீ கிள்ளிய
கதையையும் சொல்லி முடிப்பது
காற்றை விட வேகமாய்...

குடிக்காமல் பாலை செடிக்கு
கொட்டிவிட்டு
பாவம்மா செடி ஒல்லியா இருக்குல்ல..
உன் தயாள குணம்
கர்ணணனையே மிஞ்சியதாய்...

இரவெல்லாம் சொல்லிய காக்கா கதையும்
தேவதைக் கதையும்
பகலில் காக்காதேவதைக் கதையாய்
மாற்றிய உன் கற்பனை
நிஜத்தைவிட அழகானதாய்...

எறும்புக்கு வழி தெரியல
அதான் நானே
சக்கர டப்பாக்குள்ள
போட்டுட்டேன்...
ஈரம் நிறைந்த உன் குறும்புகள்
சக்கரையினும் தித்திப்பாய்....

அடுத்த வருட பிறந்த நாளுக்காய்
இன்றிலிருந்தே நாட்களை எண்ணும்
உன் குழந்தைத்தனம்
பாலினும் வெண்மையாய்...

கொஞ்சலிலும் மிஞ்சலிலும்
உதடு சுழித்து விரல் நீட்டி
நீ சொல்லும்
ச்சீ ப்போ... உன் பேச்சு கா..
அப்படியே என் மறு பதிப்பாய்...

1 comment:

சிவஹரி said...

சின்னஞ்சிறு மழலைகளின் சிட்டுத்தனமான செய்கைகள் யாவுமே எண்ணிட மலைக்காதது. அது போல அவைகளை நாம் ஏதோ ஒரு வழியில் சேமித்துக் கொண்டோமானால் பால்ய வயதுக் குறும்புகள் பாலகனுக்கு பயன்படுமொரு நாளிலே.!

நன்றி