எப்போதும் கூச்சலுடனும் குழப்பத்துடனும்
எதைத் தேடுகின்றோம்
என்பதே அறியாத மனதை
அமைதியுறச் செய்வது மரணம்...
உடலைத் தள்ளி நின்று பார்க்கும் ஆத்மாவாக
உடல் உள் நோக்குகையில்
இத்தனை நாள் கோபமும் தாபமும்
சுயநலமும் அகங்காரமும்
அதிக அழுத்தமுடன் நாளங்களில்
ரத்தத்துடன் ஓடியிருப்பதைப்
புரிய வைப்பது மரணம்..
அன்பின் துளிகளை கண்ணீர் வழி வடித்து
வாக்கியமாக இருக்கும் பலவையும்
வாக்குகளாக மாற்றி தன் தொடு உணர்வால்
உணரச் செய்வது மரணம்...
இரவுமற்று பகலுமற்று இருக்கும்
சந்தியா காலம் போல
மொழிகளற்று கற்பிக்கப்படும்
உன்னத பாடம் மரணம்...
மரணம் பயத்தின் கடைசி கட்டம்
அமைதி மரணத்தின் உச்ச கட்டம்
ஆன்மாவுக்கு ஆனந்தம் எழுதும்
சிநேகக் கடிதம் மரணம்...
கோபமும் பிரியமுமாய் நடக்கும்
வாழ்க்கை துவந்த யுத்தத்தின்
முற்று மரணம்...
உடலைப் போற்றிய அசுரத்தனம் துறந்து
ஆன்மாவைப் போற்றும்
தேவ நிலை மரணம்...
பிறப்பின் துக்கமல்ல
துறப்பின் தெய்வநிலை மரணம்
ஆன்மாவின் அடுத்த அத்தியாயம்
இந்நீள் தூக்கம்...
சுக்கிலத்தில் பிறந்த உடலை
சுட்டெறித்துத் தொடரும்
புனிதப் பயணம் மரணம்...
1 comment:
மரணத்தை பற்றிய அழகிய ஆழமான ஒர் குறிப்பு. மரணம் குறித்த பயம் அகண்டு ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் இக்கவிதையில் தெரிகிறது. படிப்போருக்கும் அந்த மனப்பக்குவத்தை அளிக்கிறது. வாழ்த்துகள் ஹேமா!
Post a Comment