Tuesday, April 17, 2012
பகிரப்படாமலேயே....
நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
நிறைய சொற்களை
நிறைய உணர்ச்சிகளை
நிறைய செய்திகளை...
இன்னும் பகிரப்படாமலேயே இருக்கின்றன
ஒரு சில உணர்வுகளும்
மிகச் சில மௌனங்களும்...
சொக்கட்டானில் காய்கள்
நகர்த்துவதைப் போலவே
என்னிடம் உன் சொற்களை
நகர்த்துகிறாய்....
இழப்புகள் தெரிந்தும்
இசைவாகவே வெட்டுப் படுகிறேன்..
உன் ஒரு முத்தத்தில் உயிரிழந்து
மற்றொன்றில் உயிர்த்தெழுகிறேன்...
தடுமாறுவதும் தடம் மாறுவதுமான
தருணங்களின் ஏதோ ஒரு துளியில்
நீ வராமலேயே தொடங்கலாம்
என் இறுதி யாத்திரை...
யாருமற்ற தனிமையில்
சில்லிட்ட என் உடலுள்
உன் அணைப்பின் கத கதப்பைச்
சுமந்து கொண்டு....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment