Wednesday, May 30, 2012

இசைக் குறிப்பு...













கடலில் இருக்கும் மீன்
கடலைத் தேடிக் கொண்டிருப்பதை போல
என்னில் உன்னை வைத்துக் கொண்டே
வெளியே தேடுகின்றேன்....

இரவைப் பகல் தொடரும்
இயல்பு போல
நான் உன்னில் இருந்தபடியே
உன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...

ஓடை நீரில் மலரை
பொத்திவைப்பது போலவே
உன் நினைவுகளை மறைத்து
தோற்றுப் போகிறேன்

பூட்டி வைத்திருந்த எனது கூடங்களில்
வாத்தியங்கள் எல்லாம்
எட்டிப் பார்த்து நீ
இழுத்து விடும் சுவாசத்தையே
குறிப்பாகக் கொண்டு
இசைக்கத் தொடங்கி விடுகின்றன..

நீ எப்போதும்
எனது இலக்காய் அல்ல
முடிவாகவே இருக்கிறாய்...

Tuesday, May 15, 2012

வேராய்.... வேறாய்












எனது கிளைகள் உனக்கான பூவை
ஒவ்வொருமுறை மலரச் செய்யும் போதும்
எனது வேர்கள் வென்னீரில் மூழ்குகின்றன

உனக்கான என் ஒவ்வொரு
புன்னைகையும்
ஒரு துளி கண்ணீரில் நனைந்தே
விரிகின்றது...

தேன் சொரியும் என் பூக்களின்
மகரந்தங்கள் யாவும்
ஊமத்தம்பூவின் கசந்த மௌனத்தை
தடவியே வருகிறது..

என் நந்தவனத்தில் விருட்சத்தின்
விதையாய் விழுந்தவன் நீ

உனக்கும் எனக்குமான பந்தம்
உனது கிளைகளை அழகு படுத்தும்
மலராகவோ
படர்ந்து தழுவும் கொடியாகவோ
துளிர்த்துத் தவழும் இலையாகவோ அல்ல

உன்னிலிருந்து மண் புதையும் வேராய்
வேறாய் மட்டுமே

என் மாலைகளின் மரணங்களின் முடிவில்
இருளில் நான் தடுமாறித் தவிக்கையில்
உயிர்த்தெழும் காலையாய்
நீ வருகிறாய்

துளித் துளியாய் மழைத்துளியாய்
என்னில் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப
நான் காலியாகிக் கொண்டே இருக்கிறேன்

Tuesday, May 1, 2012

முற்றத்து வெய்யில்...




உன் சிக்கலான கையெழுத்தை
என் சிக்கலவிழ்த்த
கூந்தலில் போடுகிறாய்....

வேண்டாம் என்ற என் கெஞ்சல்கள்
அனைத்தையும் உன் இதழ் எனும்
அழிப்பான் கொண்டே
அழித்துவிடுகிறாய்...

செய்யாத தவங்களுக்கு கிட்டிய
கேட்காத வரமாய் நேர்ந்துவிட்டது
உன் உறவு...

என் சமையலில் உப்பைப் போல நீ
அதிகம் சேர்க்கவும் முடியவில்லை
தவிர்க்கவும் முடியவில்லை...

மாற்றம் இல்லாதது மாற்றங்கள் மட்டுமே
உனது ஒவ்வொரு செயலாலும்
என் பருவங்களில் மாற்றங்களை
தலைகீழ்விகிதமாக்கியவன் நீ...

தெரிந்தே சக்கிரவியூகத்தில்
மாட்டியவள் நான்
எனது ஏற்பும் தோற்பும்
உனதாகிவிட்டது....

மழை நீர் போல் தேங்கி
இதயக் கேணியில் ஊற்றாக
பெருகுகின்றாய்...

நீ என்றேனும் ஒரு நாள் 
எனைக் கடந்துவிடக்கூடும்
எந்த முற்றத்திலும் நிற்காத
வெய்யிலைப் போல...

என் நிழலையும் பறித்துக் கொண்டு...

Sunday, April 22, 2012

தெரியாத முகவரியில்...















சில நேரங்களில் வார்த்தைகளை விட
வாக்கியங்கள் உணரவைப்பதற்கு
சுலமாகிவிடுகிறது..

என் வார்த்தைகளை ஆட்கொண்ட
வாக்கியம் நீ
உன்னை உணரவைத்தல் எனக்கு
என்னை உணர்வதைப் போல...

தெரியாத முகவரி ஒன்றில்
எனக்கானதொரு அழகிய
வீட்டைக் கட்டுகிறாய்....

உனைப் பற்றிய கனவின்
வண்ணங்களில் மூழ்கி
எண்ணங்களில் கரைகிறேன்...

காதலை ஊனமாக்கிவிட்டாய்
அதனாலேயே நான்
மாற்றுத்திறனாளி ஆகிவிட்டேன்...

நீ பரிசளித்த கைக்கடிகாரத்தின் முட்கள்
நகர்ந்து கொண்டே
காலத்தை நகர்த்திக் கொண்டே
எனை கேலி செய்கிறது...

கனவுகளில் எப்போதும்
அலை தொடாத மணற்பரப்பில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
எதைத் தொலைத்தேன் என்பது
தெரியாமலேயே...

Saturday, April 21, 2012

எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று...













கண்ணீர் சோகம் வெறுமை
ஏமாற்றம் கோபம் அழுகை அறற்றல்
இதில் எதிலுமே அடங்கிவிடாமல்

தனித்து நிற்கிறது உன்
பிரிவைச் சொல்லிய மௌனம்..

சகலத்தையும் உன்னுடன்
பகிர்ந்து பழகிய பின்

உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளைப்
பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும்
எனக்குத் தெரியவில்லை...

நீ அற்ற தனிமைகளை உன்னுடன்
எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று..

Friday, April 20, 2012

உன் விரல்கள்....













காலன் போல மெல்ல நகர்கிறது
இப் பகல்
மரணம் போல சட்டென்று
ஆட்கொள்கிறது இரவு...

இருளின் அகண்ட மௌனத்தில்
ஆரம்பித்துவிடுகிறது உன் பிம்பங்களின்
ஒளி இரைச்சல்கள்...

பழைய தொடுதல்களினூடே
புதிய கதை எழுதி நகர்கின்றன
உன் விரல்கள்...

புதிரைப் போல சிதறிக்கிடக்கும்
உன் விரல் உதிர்த்த சொற்களை
வரிசைப் படுத்தி
வாக்கியமாக்குவதற்குள்ளாகவே...

அடுத்த கதையை
எழுதத் தொடங்கிவிடுகிறாய் நீ...

Tuesday, April 17, 2012

பகிரப்படாமலேயே....














நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
நிறைய சொற்களை
நிறைய உணர்ச்சிகளை
நிறைய செய்திகளை...


இன்னும் பகிரப்படாமலேயே இருக்கின்றன
ஒரு சில உணர்வுகளும்
மிகச் சில மௌனங்களும்...

சொக்கட்டானில் காய்கள்
நகர்த்துவதைப் போலவே
என்னிடம் உன் சொற்களை
நகர்த்துகிறாய்....

இழப்புகள் தெரிந்தும்
இசைவாகவே வெட்டுப் படுகிறேன்..

உன் ஒரு முத்தத்தில் உயிரிழந்து
மற்றொன்றில் உயிர்த்தெழுகிறேன்...

தடுமாறுவதும் தடம் மாறுவதுமான
தருணங்களின் ஏதோ ஒரு துளியில்
நீ வராமலேயே தொடங்கலாம்
என் இறுதி யாத்திரை...

யாருமற்ற தனிமையில்
சில்லிட்ட என் உடலுள்
உன் அணைப்பின் கத கதப்பைச்
சுமந்து கொண்டு....