
உன் ஒற்றை விரல் பிடித்து
நடை சொல்லித் தருகையிலே
தடுக்கிவிடுமோ என தவித்த மனது
இன்று வலிக்கிறது _ அதே
ஒற்றை விரலில் எனை போகச் சொல்லி
நீ வாசலை சுட்டும் போது....
ரத்தத்தை பாலாக்கி ஊட்டுகையில்
பூரித்த கடிபட்ட என் மார்பு _ இன்று
அடிபட்டது அதே மார்பில்
துணி மூட்டை நீ எறிந்து
உன் பல் கடிக்கையில்...
ஒற்றைப் பிள்ளை பெற்றாலும்
விட்டுக் கொடுத்து வாழப் பழக்கினேன்
இன்று நீ என்னையே
விட்டுவிடப் போவது தெரியாமல்...
உன் பிள்ளை கைப் பிடித்து
உன் துணையின் தூண்டுதலில் __ நீ
என் கை உதறுகையில்
உன் பிள்ளை முகம் பார்த்து
பதைக்கிறது என் உள்ளம்
நாளை உனக்கும் நடக்குமோ என் கோலம்?..
கற்பனைக்கே கனக்கி்றது மனது
தனி மரமாய் உனைப் பார்க்க....
ஆதலால் விட்டு விட்டுப்
போகிறேன்
என் கைத்தடியை
உனக்குத் துணையாக.....
No comments:
Post a Comment