முள் ஒடித்த தீர்ப்பின் முடிவில்
என் ஆயுள் முடிவு ஆரம்பித்த இரவு
குற்றமும் பாவமும் கொலைகளும் துரத்த
என் விழிகள் உறக்கம் தொலைத்த இரவு
கண்களின் வழியே திரவம் கசிந்து
அமிலமாய் மாறி சுட்ட இரவு
பசியில் அலையும் இரப்பையின் இரைச்சல்
பாவ இறைச்சி புசித்த இரவு
பன்னிய பாவங்கள் பட்டியல் இட்டு
பட்டிணத்தாரை படித்த இரவு
அரக்க புத்தனும் புத்த அரக்கனும்
மாறி மாறி யுத்தம் செய்த இரவு
கம்பிகள் வழியே தப்பித்த அரக்கம்
வெற்றுத்தரையில் தவழ்ந்தது புத்தம்
ஒவ்வொரு இரவும் இருக்க இறுக்க
பாவமுடிச்சுகள் நெகிழ்ந்தது கண்டேன்
இக் கடைசி இரவின் இறுக்கத்திலே
இம்மை துறந்து இன்மை உணர்ந்தேன்
பிறப்பால் பெற்ற மனித இடத்தை
இறப்பு நிரப்ப
மரணம் பரிசாய் தந்த
மனிதத்துவத்தில்
கடைசி முடிச்சும் கழுத்தை இறுக்க
பாவங்கள் அவிழ்ந்து புத்தனாய் இறந்தேன்..
No comments:
Post a Comment