
உன் மௌனத்தை தட்டி தட்டியே
களைத்துவிடுகிறது
என் வார்த்தைகள்...
உனது இருப்பின் இடம்
வழி தெரியாத பயணத்தின்
முடிவிலேயே இருக்கிறது...
என் கனவுக் கூட்டை கட்ட
உன் நினைவு இறகுகளை
சேமிக்கிறேன்...
நான் இமைகளை மூடுவது
கனவிலேனும் நம் சந்திப்பு
நிகழட்டும் என்பதால்
வழி தவறியேனும்
மறக்காமல் வந்துவிடு..
உன் விதி ரேகையின்
தேய்ந்த கோடாகவே
இருக்கிறேன் நான்...
என் தலை எழுத்தில்
நீ மட்டும் முதல் எழுத்தாகவே
இருக்கிறாய்...
உன் நினைவுகளின் இடறலில்
தடுக்கி விழுந்த நான்
ஒவ்வொரு முறையும்
எழுந்திருக்கிறேன் உனக்கான
ஒரு கவிதையோடு...
2 comments:
அருமையான கவிதை. உங்கள் கவிதைகளில் இருக்கிற எளிமை எனக்கு பிடித்திருக்கிறது. இப்படியே இருங்கள்! அடுத்த கட்டம், நவீன கவிதை என்று போய்விடாதிருங்கள். நன்றி!
வருகைக்கும் பதிவிற்கும் மிக நன்றி திரு. துரைடேனியல்.
Post a Comment