Tuesday, December 20, 2011
புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்....
புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்
இது அவன் பாட்டனார் எழுதிய புத்தகமாம்
ஆயிரம் பிரதிகள் அறுபதே நாளில் விற்றதாம்
தேடிக்கொண்டிருக்கிறான் இன்னமும்
ஆயிரம் பிரதிகளில் ஒன்றுகூட
அவன் குடுபத்தில் இல்லை
கையெழுத்துப் பிரதி உட்பட
தலைமுறையின் எச்சங்களில் எல்லாம்
மிச்சங்கள் இல்லாமல் தேடினான்
பாட்டியின் பழைய டிரங்க்குப் பெட்டியில்
சில இதிகாசம் சிக்கியது
பெரியம்மாவின் அட்டைப் பெட்டியில்
சில மாயாஜாலங்கள் மாட்டியது
அம்மாவின் அலமாரியில்
பக்தி மணம் வீசியது
சித்தியின் சிற்றரையில்
சிற்றிலக்கியம் சிதறியிருந்தது
பெண்கள் வழி உதவாதென்று
ஆண்களிடம் ஆரம்பித்தது அவன் தேடல்
தாத்தாவின் அறையில் சித்த மருத்துவமும்
பெரியப்பாவின் அலமாரியில் சித்தர் பாடல்களும்
அப்பாவின் பீரோவில் சிந்தனாவாதிகளும்
சித்தப்பாவிடம் சில புரட்சியாளர்களும்
நிரம்பியிருந்தனர்
அண்ணனின் ஸ்கைபேகில்
உலக அழகியரும்
அக்காவின் இழுப்பறையில்
அழகியல் புத்தகமும்
சிரித்துக் கொண்டிருந்தன
தலைமுறை இடைவெளிகள்
அவரவர் அலமாரியில்...
ஆனால் அனைத்திலும் ஒற்றுமையாக
மூன்று அட்டைகள் மூடி
முதல் அட்டை மறைத்து
நிர்வாணம் தரித்த புத்தகம் மட்டும்
இன்னும் பத்திரமாக....
புத்தகப் புழுக்களும் சில அட்டைப் பூச்சிகளும்
கடைசிவரை கிடைக்கவில்லை...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment