Thursday, June 28, 2012

முழுமையாய்...













நீ முழுமையானவன்
உனதான அனைத்தையும்
என்னிடம் கொடுத்தபின்னும்
நீ முழுமையாகவே இருக்கிறாய்...

கிணறு...











உடைந்த குடம்
ஒன்றாகிவிட்டிருந்தது
நீர்...

Tuesday, June 26, 2012

இருளில்...













விளக்கற்று என் கைகள்
எரியும் விளக்காக
நீ...

சொல்லாமலே...














சொல்லாமல் அடக்கி
வைத்த சொற்கள் எல்லாம்
தொண்டைக் குழியில் புதைந்து பாராமாகி
நெஞ்சை அழுத்துகிறது...

சேர்த்து வைத்த வார்த்தைகள்
செல்லாத காசாய் துரு பிடித்து
இதயத்தை அறுக்கிறது...

நான் விட்டுச் சென்றால்
நீ என்ன செய்வாய்??..
விளையாட்டாய் நீ கேட்ட அன்றே
நான் சொல்லியிருக்க வேண்டுமோ?!..

சத்தியமாய் வாழ்வேன் உயிரற்று என...

Sunday, June 24, 2012

கண்டதும்??... கண்டதும்!!!...













கவிதை எழுத வேண்டும் அவனுக்கு
நாளை பத்திரிக்கையின் அச்சில்
அவனது வரிகள் கோர்க்கப் படவேண்டும்

அவன் மனம் கவிதைக்கான கருவைச் சுற்றி
தெரிந்த வார்த்தைகளுடனும்
தெரியாத மொழிகளுடனும்
வட்டமிட்டுக் கொண்டிருந்தது..

சுழலும் மின்விசிறியின்
அலுமினிய இறகுகளின் சுற்றி சுழன்று
ஜன்னல் கம்பிகளில்
வௌவ்வாலாய்த் தொங்கி
ஒட்டடையின் அடுக்குகளில் மாட்டிக் கொண்ட
ஈயாய் சிக்கித் தவித்து
மூச்சு முட்டி

பின் சடக்கென பறந்தது அவன்
அரூப உடல் சுமந்து

நடை பாதை ஓரத்தில்
நடந்து கொண்டிருந்த
நாயின் புனர்வில் நிமிடம் போல் தங்கி

வண்டிக்காரன் பெண்டாட்டியின்
ஆடை விலகலை
சில நிமிடம் ரசித்து விட்டு

எதிர் வீட்டுச் சிறுமியின்
அந்தரங்கம் தொட்டுவிட்டு

அடுத்த வீட்டின் படுக்கை அறையினை
திருட்டுத் தனமாய் எட்டிப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சுடன் திரும்பி

தானே அவையாகவும்
அவைகளே தானாகவும்
கற்பனையில் திளைத்துக் களைத்துத்
திரும்பி வந்து

பேனா முனையில்
ஓய்வெடுத்து மூச்சு வாங்க...

இறுதியில் இந்து மதக் கோட்பாடும்
புத்தனின் போதனையும்
எழுதத் தொடங்கிய நேரம்

கவிதை தானாகவே தன்னை
அழித்துக் கொள்ள ஆரம்பித்தது....

Saturday, June 23, 2012

இருந்தும்...
















எந்தக் கடவுளை வேண்டி
உனைத் திரும்பப் பெறுவேன்
எதை விட நேர்ந்து கொண்டு
உனை மறுபடி அடைவேன்..

கடவுளுக்கும் காதலுக்கும்
அப்பாற் பட்டு இருக்கிறாய்
உறவுக்கும் உரிமைக்கும்
எட்டாமல் இருக்கிறாய்...

பிரிவையும் பிரியங்களையும்
நூல் நுணியில்
ஊசலாட வைக்கிறாய்...
தள்ளி நின்று
உயிர் கொண்ட உறவுக்கு தாளிடுகிறாய்...

நீராக மாறி என் தாகங்களைப் பருகுகிறாய்
மோகங்கள் எரித்துவிட்ட என் மௌனத்துள்
மோன யுத்தம் செய்கிறாய்...

நேர்கோடாய் இருந்த என்னை
வட்டமாக மாற்றிவிட்டு
நினைவுகளை உனை நோக்கி மட்டுமே
சுழற்றியடிக்கிறாய்...

சுழலில் எனை சுற்றவிட்டு
எட்ட நின்று நிபந்தனைகள் விதிக்கிறாய்
உன் கண் அசைவில்
என் தலை ஆடச் செய்கிறாய்...

இருந்தும்...
இனி என்ன செய்து
உனைத் திரும்பப் பெறுவேன்...

Monday, June 18, 2012

முரண்...












இலையின் அடிப் பரப்பில்
கூட்டுக்குள் இருந்ததைப் பார்த்து
உவ்வேக் ச்ச்சீய் புழு
என்றவள் ஓடினாள்
வண்ணத்துப் பூச்சியைப்
பிடிப்பதற்கு...

Sunday, June 17, 2012

வெளிச்சத்தில்...












ஒவ்வொரு இரவிலும்
இமைகள் சேரும் நேரங்களில்
உனைப்பற்றிய நிறைய நினைவுகள்
மெல்லிய இறகுகளாய்
என் கனவுகளை வருடிச் செல்லும்

என் வருகைக்காக பேனா முனை கடித்து
நீ காத்திருக்கும் தருணங்களும்
கண்டவுடன் பின்னிக் கொள்ளும்
உன் விரல்களின் அழுத்தங்களும்
வார்த்தைகள் உதிர்த்துவிட்டு
உதடுகள் பேசிய பாஷைகளும்
பிரிகையில் உன் கண்களில்
கண்ட தவிப்புகளும்

அத்தனையும் ஸ்பஷ்டமாக
இமைகள் மூடிய என் கனவின்
இருட்டுகளில் இமைக்க மறந்து
கண்டு களித்தேன்

எத்தனை எத்தனித்தும் கடைசிவரை
வெளிச்சத்தில் கண்ட உன் முகம் மட்டும்
நினைவுகளில் பதியவே இல்லை

Saturday, June 9, 2012

காத்திருக்கிறேன்...













நீ காதோடு செய்த சத்தம்
காதலோடு தந்த முத்தம்
என் நெஞ்சோடு செய்யும் யுத்தம்
உன் நினைவோடு நித்தம் நித்தம்

என் மூக்குத்தி ஸ்பரிசங்களை
நீ மூக்கால் உணரும் போதெல்லாம்
மூர்ச்சையாகிப் போகின்றது
நான் முடிந்து வைத்த
வார்த்தைகள் எல்லாம்

பாதைகள் தூரம் தான்
பயணங்கள் நீளம் தான்
உன் நினைவு நிழலாய்
தொடரும் மட்டும்
குறுகும் சாலை மாயம் தான்

கனவுகள் தின்று
நினைவுகள் மென்று
காத்திருக்கிறேன்
காதலில் கொஞ்சம் காதலோடு கொஞ்சம்...

குறுங்கவிதைக‌ள்...










பூமியில் ஆயிரம் நிலவுகள்
பனித்துளிகளில் நிலவின்
பிம்பம்...
____________________

ஏரி நீர்
குதிரையின் குளம்புச் சத்தம்
தெரித்தன நிலவின் துளிகள்...

நான்..













நான்..


விதைகளில் பெயரெழுதி
முளைகளில்
உனை எதிர்பார்க்கும்
காதல் விவசாயி...

வரம் கேட்க...














ஒற்றை நிலவாய் தவமிருந்து
உன்னிடம் வரம் கேட்க
நட்சத்திர வார்த்தைகளை
சேமித்து வைத்திருந்தேன்

அத்தனையும் சூரியனாய்
உனைக் கண்ட
நொடிப் பொழுதில்
காணாமல் போய்விட்டன...

புத்தன்...



















குளிர் நடுக்கிய இரவொன்றில்
புத்தன் சிலை எரித்து
நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவனிடம்
அதிர்ச்சியுடன் கேட்டேன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என
அவன் நிதானமாகச் சொன்னான்
புற புத்தனை எரித்துக் கொண்டிருக்கிறேன்
என் அக புத்தனை காத்துக் கொள்ள..

Friday, June 8, 2012

தேநீர் கோப்பைகள்...













நம் இருவருக்கும்
இடையே ஆன
தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான்
அருந்த அருந்த
உன் கோப்பை
நிரம்பிக்கொண்டே இருந்தது
மூன்றாம் கோப்பை
எப்போதும் போல்
காலியாகவே..

Wednesday, June 6, 2012

போன்சாய் காடு...












தனித்தே விளையாடிப் பழகிய சிறுவன்
தனக்கென விளையாட ஒரு
காட்டை சித்தரித்தான்
போன்சாய் மரங்களுடனும்
போன்சாய் விலங்குகளுடனும்

வானுயரும் சில்வர் ஓக்கும்
தேகம் விரிக்கும் தேக்கு மரமும்
விரிந்து பரந்த ஆலமரமும்
புத்தன் நிரைத்த போதி மரமும்
தன் உருவம் குறுக்கி போன்சாயாக
சிறுவனின் காட்டுக்குள்
சாமரம் வீசிக்கொண்டிருந்தது

கழுத்து நீண்ட ஒட்டகச் சிவிங்கியும்
காட்டுக்கே ராஜா சிலிர்த்த சிங்கமும்
தாவி ஒடும் புள்ளி மானும்
கவ்விப் பிடிக்கும் சிறுத்தைப்புலியும்
வகை வகையாய் பிற மிருகங்களும்
தன் சுயத்தை அடக்கி சிறிய உருவில்
துள்ளித் திரிந்தன சிறுவன் காட்டில்

பார்த்துப் பார்த்துக் களித்த சிறுவன்
சற்றே சலிப்புற மாற்றம் வேண்டி
மனிதனை காட்டுக்குள்
இறக்கினான் போன்சாயாக

சுற்றி சுற்றிப் பார்த்த மனிதன்
அங்கும் இங்கும் அலைந்த மனிதன்
சிற்றுருவம் பார்த்துச் சினுங்கிய மனிதன்
தன் பசி தான் தீர்க்க வேண்டி
பிடித்துக் கடித்தான் போன்சாய் முயலை

கடித்தவுடன் கைகள் வளர
அடித்துத் தின்றான் போன்சாய் மானை
அடிக்கக் கடிக்கக் அவன் உருவம் வளர
அதிர்ச்சி காட்டின போன்சாய் உயிர்கள்

புல்லைப் பிய்த்த மானும் வளர
மானை அடித்த புலியும் வளர
ஒட்டகம் பிடித்த சிங்கமும் பெருக்க
மரத்தின் வேர்கள் நகர்ந்து
அடுத்ததை உரிஞ்ச

போன்சாய் காடு ஆனது மிகையாய்
போன்சாய் மிருகங்கள் ஆனது பெரிதாய்
மனிதன் காட்டிய வழியைப் பிடித்து
குறுக்கே ஓடிய அவனை வதைத்து
அனைத்தும் ஓடின வெளியே குதித்து

மறுபடி சிறுவன் தனியனானான்
போன்சாய் பிணத்தை வெறிக்கலானான்..

Tuesday, June 5, 2012

உனதழைப்பு...

















மிக நீண்டதொரு
இடைவேளைக்குப் பிறகு
அலைபேசியில் உன் அழைப்பைப் பார்த்து
முகம் இறுகியது மனம் இளகியது
மூளை கரைந்தது கண் அழுதது
உதடு துடித்தது நாக்கு தழு தழுத்தது
மூக்கு விடைத்தது விரல்கள் பரபரத்தன
இத்தனையும் சமாளித்து
என் செவியில் நுழைந்த
உன் குரல் மனதை எட்டுவதற்குள்
இணைப்பு மீண்டும்
துண்டிக்கப்பட்டுவிட்டது...

Monday, June 4, 2012

உனது கோபம்...
















உனது கோபம் என்ற
துரு ஏறிய ஆணி
என் கையில் அறையப்பட்டு...

உடலெங்கும் குத்திக் குதறிக் கொண்டு
உருப்புகளை கீரியபடி சென்று
உனை முதலில் காட்டிய
என் விழி வழி
வெளி வந்து விழுந்தது...

உனக்காக எப்போதும்
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தின் ரத்தத்தை
அள்ளித் தெளித்துக் கொண்டு...

சவமாகி விழுந்தது உன் மீதான
என் நம்பிக்கை

Sunday, June 3, 2012

தொடர்பு எல்லைக்கு வெளியே....











இப்போதெல்லாம் இரவில்
என் அலைபேசியை
மௌனமாக்குவதே இல்லை
தொடர்பு எல்லைக்கு வெளியே
நீ மௌனமாக இருப்பதால்....

Friday, June 1, 2012

விட்டுச் சென்றவை...













பெரு மனதுடன்
எனக்காகவே எத்தனையோ
விட்டுச் சென்றாய்
உனக்காக சிலவற்றை மட்டும்
எடுத்துக் கொண்டு

நிலவைப் பரித்துக் கொண்டு
வானத்தை விட்டுச் சென்றாய்

ஈரத்தை உரிஞ்சிக் கொண்டு
மேகத்தை விட்டுச் சென்றாய்

சுவாசத்தைத் திருடிக் கொண்டு
காற்றை விட்டுச் சென்றாய்

பார்வையை பிடுங்கிக் கொண்டு
கண்களை விட்டுச் சென்றாய்

வேர்களை வெட்டி கொண்டு
கிளைகளை விட்டுச் சென்றாய்

நினைவுகளை எடுத்துக் கொண்டு
தனிமையை விட்டுச் சென்றாய்

நீ விட்டுச் சென்றது இப்படி எத்தனையோ
என்னையும் சேர்த்து
உன்னைத் தவிர.....

எறும்பாய்...











மலைபோல் இருந்த மனதில்
எறும்பாய்த்தான் ஊரினாய்
மிக மெதுவாக...
மிக மென்மையாக...
மிகுந்த காலம் எடுத்துக் கொண்டு..

எறும்புதானே
என்ன செய்யும்
என இருமாந்திருந்தேன்..

நீ ஊரித் தேய்ந்த சரிவில்
எனை நீ எட்டித் தள்ளும்வரை...

ஊனப் பறவை....













சுட்டெறிக்கும் சொற்களை
ஒவ்வொரு நொடியும் வீசுகின்றாய்
பூதானோ என மயங்கியே ஏற்கின்றேன்...

புன்னகையை எதிர்பார்த்து
செந்தனலைப் பெறுகின்றேன்

காலங்கள் பல கடந்து
உன் காதலைப் பெற வந்தேன்
தூரங்கள் பல நடந்து
உன் தோள்களில் சாய வந்தேன்

கண்களாலேயே காயம் செய்து
எட்டி என்னை நிற்க வைத்தாய்

மிகத் தேர்ந்த கண்கட்டு வித்தைக்காரன் நீ

நீ தருகின்ற காயங்களை எல்லாம்
கிரீடங்களாக எனை ஏற்கச் செய்தாய்

என் கூட்டை விட்டு வெகு தூரம்
வந்துவிட்டேன்
உனக்குப் பரிசாக என் சிறகு ஒன்றை
கொய்து கொண்டாய்

நீ இல்லாது நடக்க
கால்களும் அற்று
ஒற்றைச் சிறகுடன் ஊனப் பறவையாக
இத்தனை தூரம் நான் எப்படிக் கடப்பேன்?....