Tuesday, May 31, 2011

நீ அங்கு நலமா?....




















நீ இருந்த பொழுதுகளில்
என் இரவெல்லாம் பௌர்ணமிகள்

நீ பிரிந்த இரவுகளில்
உன் நினைவுகளே நட்சத்திரங்கள்

பிரியும் முன் உன் பிரியத்தை
ஒரு துளி கண்ணீராகத்
தெளித்துச் சென்றாய்

என் தோட்டத்துச் செடிகளில்
வேருக்கும் வாசத்தை
அளித்துச் சென்றாய்

உன்னுடன் இருக்கையில்
மௌனங்கள் கூட
மலர் ஏந்திய வார்த்தைகளாய் மாறி
கவிதையாக உதிர்ந்தது

இன்று வார்த்தைகளே அந்நியமாகி
மௌனத்தில் கரிக்கின்றது...

உனக்காக இதழ் மலர்ந்த
என் சிரிப்புகள் யாவும்
இன்று பிறருக்கான
இதழ் விரிதலாகிவிட்டது...

பிரபஞ்சத்தையே சுருக்கியது
உன் நினைவு
நினைவுகளை விரிவாக்கியது
இப்பிரிவு....

வாழ்தலின் சுவாரசியம் கூட்டியவனே...

இறத்தலை விட
இங்கு நான் இருக்கிறேன்

நீ அங்கு நலமா?...

Saturday, May 28, 2011

உனக்கென....















மழையில் நனைந்து மேனி தழுவிய
தென்றல் போல
எனைத் தழுவிச் சென்றாய்...

கனவுகளில் திரியும்
ஒற்றை மேகமாய்
நிலத்தில் தொடரும்
ஒற்றை நிழலாய்
நினைவுகளில் எப்போதும் நீ - சிலீரென்று

உன் சுவாசங்கள் சுடுகின்ற தூரத்தில்
இருந்து கொண்டே
என் சுவாசங்களை திருடிச் சென்றாய்

கடலில் கலந்த மழைத் துளியைத்
தேடுவது போல்

உன்னுள் தொலைந்த
என்னைத் தெடிக்கொண்டிருக்கிறேன்

விதையைப் போல காதலை என்னில்
தூவிச் சென்றாய்

உனக்கென மலர்கள் சுமந்து
தவமிருக்கிறேன் நான்

புன்னகையில் கரைகின்ற
கண்ணீர்த் துளிகளுடன்...

Friday, May 27, 2011

நிழலும் நினைவும்...













என் மூடிய புத்தகத்தில்
பதித்து வைத்த
பன்னீர் பூ நீ
வாடியிருந்தும்
வாசனை பரப்புகிறாய்
மனதினுள்....

ஒரு துளியாய்
தேன் துளியாய்
என்றோ உயிரினுள் விழுந்தாய்
தாகம் தனிகி்றது
இன்று எனக்கு....

என் வெள்ளைப் பக்கங்களின்
கருப்பு கவிதைகள் நீ......

என் கொலுசில் உதிராமல் இருக்கும்
ஒற்றை முத்தில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
இன்னமும்
உன் முத்தத்தின் ஈரம்...

நீ விட்டுச் சென்ற நிழலும்
வெட்டிச் சென்ற நினைவும்
நெஞ்சினுள் காயாத ஈரமாய்....
சுடும் அக்னிச் சரமாய்.....

Sunday, May 22, 2011

யுத்தப் பூக்கள்....

வெய்யிலும் மழையும் வெளியில் தான்
உங்களுக்கு
வாழ்விடமே அதுதான் எங்களுக்கு

உங்கள் குழந்தைகள் விளையாடுவது
ரப்பர் பந்தோடும் ப்ளாஸ்டிக் மட்டையோடும்

எங்கள் குழந்தைகள் விளையாடுவது
சிதறிய எலும்போடும்
சிதைந்த மண்டையோட்டோடும்







ஒரு மார்பில் வாய் வைத்து
மறு மார்பில் கையணைத்து
பசியாறும் குழந்தை உங்கள் மடியில்

அறுந்த ஒரு மார்பின்
ரத்தத்தில் கை நனைத்து
மீந்த ஒரு மார்பில் கண்ணீரால்
உப்புரைந்த பால் குடித்து
நா நனைக்கும் குழந்தைகள்
எங்கள் மடியில்

வாழ்வியல் படிக்க பள்ளிக்குப்
போபவர்கள் நீங்கள்
வாழ்க்கையைப் படித்து வீதிக்கு
வந்தவர்கள் நாங்கள்

காற்றில் கலந்த ஓலங்கள் கேளீர்...

கை இருக்குது இங்கே
கை தொலைத்த என் அண்ணன் எங்கே?

வாயில் பாலிருக்குது இங்கே
பால் கொடுத்த மார்பெங்கே?

கையணைத்த உடலிங்கே
என் மடி உறங்கிய குழந்தையின் முகமெங்கே?

விரல் இருக்குது இங்கே
பிடித்து நடந்துவந்த என் தங்கை எங்கே?

அக்காளின் தாவணிக்குள் மறைந்து வந்த
முகமிருக்குது இங்கே
சுமந்து வந்த தம்பியின் உடலெங்கே?...

உயிரில்லை உடலில்லை
பொத்தி வைத்த கற்பும் நிலையில்லை

இது தலை எழுத்து..
வேறென்ன சொல்ல?
இனி பிறக்கும் குழந்தைகளின்
முதலெழுத்தாய் எதைச் சொல்ல?

சுமப்பதும் பெறுவதும் வலி என்றால்
தாய்மைக்கு அர்த்தம் இல்லை
இன்று சுமக்கிறோம் ரணங்களை
நாளை பெற்றெடுப்போம்
“தமிழ் ஈழமாக”..










நசித்தவனே ஞாபகங்கொள்...
புதைந்தது அனைத்தும் சதைகள் அல்ல
விதைகள்
ஒவ்வொன்றும் சுமந்து வரும்
ஓராயிரம் விருட்சங்கள்
யுத்தப் பூக்கள் ஏந்தி.....

Thursday, May 19, 2011

என் மரண நாழிகையில்....


யார் யாரோ வந்தார்கள்
கூட்டம் கூட்டமாய் வந்தார்கள்
மாலையோடு வந்தார்கள்
மலர் வளையத்தோடும் வந்தார்கள்

வித விதமான கண்ணீர்கள்
பலவிதமான சோகங்கள்

விரல் சுண்டி தெரித்த நாசுக்கு அழுகை
உடல் குலுங்க அழுத பாமர அழுகை
கட்டிப்பிடித்து அழுத காட்டாற்று அழுகை
வாய் பொத்தியும் வந்த அடங்காத அழுகை
சத்தம் மட்டுமே வந்த கூப்பாட்டு அழுகை

அத்தனைக்கு மத்தியிலும் மனம் தேடியது உன்னை...

வருடங்கள் ஒடிவிட்டது
சொந்தங்கள் மாறிவிட்டது
இளமை உறிஞ்சி முதுமையும் எஞ்சிவிட்டது

மாற்றிய முகவரிகளால்
மாறிவிட்ட முக வரிகள்
காலச் சக்கரத்தில் நாம்
காணாமல் போனவர்கள்

கடைசியாய் தேடினேன்...

அட! தூரத்தே நீ....
ஒற்றை மலரோடு...
விழி ஓரத்தே....
அது என்ன கண்ணீரா?!...
ஓ! நீயும் என்னைப்போல் காதலித்தாயோ!...

Saturday, May 14, 2011

மௌனம்?!....















யார் சொன்னது மௌனம் சப்தமற்றது என?
யார் சொன்னது மௌனம் சொற்களற்றது என?
யார் சொன்னது மௌனம் நிசப்தமானது என?
சொல்ல முடியாத வார்த்தைகளைத்
தேக்கி நிற்கும்
மௌனம் ஒரு பேரிரைச்சல்..
மௌனம் ஒரு மோன தவம்
மௌனம் ஒரு குழப்பம்
மௌனம் ஒரு தெளிவு
மௌனம் ஒரு புதிர்
மௌனம் ஒரு தயக்கம்
மௌனம் ஒரு இறுக்கம்
மௌனம் ஒரு இறுமாப்பு
மௌனம் ஒரு பணிவு
மௌனம் ஒரு தேவநிலை
மௌனம் ஒரு ராட்சசம்
மௌனம் ஒரு கரைதல்
மௌனம் ஒரு கரைத்தல்
மௌனம் ஒரு முரண்
மௌனம் ஒரு எதிர்ப்பு
இனி யாராவது மௌனமாயிருந்தால்
சம்மதம் என அர்த்தம் கொள்ளாதீர்..

சொற்களின் அதிர்வுகளை விட
மௌனத்தின் அதிர்வுகள் வீரியமானவை...

சில நேரம்
மௌனத்தின் சப்தங்களில்
பூகம்பமும் வெடிக்கலாம்
பூக்களும் மலரலாம்...

யார் சொன்னது மௌனம் சப்தமற்றது என?...

தீ வடித்த தேன் துளிகள்....








உன் காதல் என்ற ஒற்றை பூ தாங்க
எத்தனை முட்களை என் இதயம்
ஏற்கத் தயாராகிவிடுகிறது!...

உன் முத்தப் பரல்களால்
நிரம்பியிருந்த என் கொலுசுகள்
இன்று கண்ணீர் பரல்களாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது...

நீ பிரிதலை உரைத்த நிமிடத்திலிருந்து
என் நொடிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன
அக்னிக் குழம்பாக....

முத்தமிட்ட உதடுகள் உலரும் முன்னே
தீ வடித்த தேனை ஏன்
தடவிச் செல்கிறாய்?!....

Wednesday, May 11, 2011

காதலில்.....







விழுந்ததென்னவோ இருவரும்

ஆனால் என்னிடம் மட்டும் பரிசாய்

நீ தந்த வலி....

Tuesday, May 10, 2011

காற்றின் அலைகளில்....



பிரித்த புத்தகத்தில் வாடிய பூப் போல
உன் ஞாபகம்...

என் தோட்டத்தின்
கண்ணீர் மது ஏந்தி மலர்ந்த
காயப் பூக்களில் காதல் மணம் மட்டும்
காற்றின் அலைகளில் உன் மனம் தேடி...

உன் கண்கள்
என் இமைகளாக இருக்கும் போது
உறங்கவும் முடியவில்லை
விழிக்கவும் பிடிக்கவில்லை...

மௌனம் சங்கமத்தின்
மொழி என்றால்
உன் மௌனம் ஏன் என்னுள்
முகாரி இசைக்கின்றது?!....

Monday, May 9, 2011

என்றும் என் நெஞ்சோடு....


காற்றாய் நெஞ்சினுள் நுழைந்தாய்

தென்றலாய் மாறித் தாலாட்டுப் பாடி

கண் மூடித் தூங்கும் முன்

புயலாய் புறப்பட்டுவிட்டாயே?..

நீ மறந்து போனாலும் உனதன்பின்

சாரல்கள் என்றும் என் நெஞ்சோடு...

Sunday, May 8, 2011

நீ வருவாயென...

பனி மலைக்குள் ஒரு எரி மலை
என்னுள் உன் காதல்..
பூவுக்குள் ஒரு பூகம்பம்
என் நெஞ்சில் உன் துடிப்பு..

எண்ணெயும் இல்லை
திரியும் இல்லை ஆனாலும்
எனை விளக்காக்கி எரிக்கின்றது
உன் நினைவு....
உன் கனவுத் தீக்கள் சுட்டே
புகைகிறது என் இரவு....

என் கவிதைப் புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்தில்
நீ தொலைகிறாய்
புரட்ட மனம் இல்லை
முதல் பக்கத்திலேயே
ஒட்டிக் கொள்கிறது விரல்கள்.

உனக்காய் இயற்றிய கவிதைகள்
இன்னமும் எழுதப் படாமல்...
விழிகள் உன் வழிகளையே
நோக்கியிருக்கிறது
என்றேனும் மரணம் போல்
நிச்சயம் நீ வருவாயென.....

Tuesday, May 3, 2011

தேடல்....


இதுவே என் கடைசி கடிதம்
என்று உனை திட்டி நான் எழுதும்
கடிதங்கள் இன்னும் தொடர்கதையாய்....

ஒவ்வொரு முறை உனை மறக்க
எத்தனிக்கும் போதும் கடைசியாய்
ஒரு முறை என்று நினைத்த நினைவுகள்
இன்னும் மறக்க முடியாமல்.....

நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
காத்திருக்க, ஓடிய நாட்கள்
இன்னும் எழுதப்படாத கவிதைகளாய்....

உன்னிடம் திட்டு வாங்க வேண்டும்
என்பதற்காகவே உனைத் திட்டி
வாங்கிக் கொண்ட வைர வரிகள்
குத்தாத முள்ளாய் இன்னும் என் நெஞ்சில்.....

உன் கேள்விக்கு பதில் என்னிடமும்
என் கேள்விக்கு பதில் உன்னிடமும்
இருந்தும் விடை தெரியாத புதிராய்
இன்னும் தொடர்கிறது நம் தேடல்....