
யார் யாரோ வந்தார்கள்
கூட்டம் கூட்டமாய் வந்தார்கள்
மாலையோடு வந்தார்கள்
மலர் வளையத்தோடும் வந்தார்கள்
வித விதமான கண்ணீர்கள்
பலவிதமான சோகங்கள்
விரல் சுண்டி தெரித்த நாசுக்கு அழுகை
உடல் குலுங்க அழுத பாமர அழுகை
கட்டிப்பிடித்து அழுத காட்டாற்று அழுகை
வாய் பொத்தியும் வந்த அடங்காத அழுகை
சத்தம் மட்டுமே வந்த கூப்பாட்டு அழுகை
அத்தனைக்கு மத்தியிலும் மனம் தேடியது உன்னை...
வருடங்கள் ஒடிவிட்டது
சொந்தங்கள் மாறிவிட்டது
இளமை உறிஞ்சி முதுமையும் எஞ்சிவிட்டது
மாற்றிய முகவரிகளால்
மாறிவிட்ட முக வரிகள்
காலச் சக்கரத்தில் நாம்
காணாமல் போனவர்கள்
கடைசியாய் தேடினேன்...
அட! தூரத்தே நீ....
ஒற்றை மலரோடு...
விழி ஓரத்தே....
அது என்ன கண்ணீரா?!...
ஓ! நீயும் என்னைப்போல் காதலித்தாயோ!...
No comments:
Post a Comment