Sunday, May 22, 2011

யுத்தப் பூக்கள்....

வெய்யிலும் மழையும் வெளியில் தான்
உங்களுக்கு
வாழ்விடமே அதுதான் எங்களுக்கு

உங்கள் குழந்தைகள் விளையாடுவது
ரப்பர் பந்தோடும் ப்ளாஸ்டிக் மட்டையோடும்

எங்கள் குழந்தைகள் விளையாடுவது
சிதறிய எலும்போடும்
சிதைந்த மண்டையோட்டோடும்







ஒரு மார்பில் வாய் வைத்து
மறு மார்பில் கையணைத்து
பசியாறும் குழந்தை உங்கள் மடியில்

அறுந்த ஒரு மார்பின்
ரத்தத்தில் கை நனைத்து
மீந்த ஒரு மார்பில் கண்ணீரால்
உப்புரைந்த பால் குடித்து
நா நனைக்கும் குழந்தைகள்
எங்கள் மடியில்

வாழ்வியல் படிக்க பள்ளிக்குப்
போபவர்கள் நீங்கள்
வாழ்க்கையைப் படித்து வீதிக்கு
வந்தவர்கள் நாங்கள்

காற்றில் கலந்த ஓலங்கள் கேளீர்...

கை இருக்குது இங்கே
கை தொலைத்த என் அண்ணன் எங்கே?

வாயில் பாலிருக்குது இங்கே
பால் கொடுத்த மார்பெங்கே?

கையணைத்த உடலிங்கே
என் மடி உறங்கிய குழந்தையின் முகமெங்கே?

விரல் இருக்குது இங்கே
பிடித்து நடந்துவந்த என் தங்கை எங்கே?

அக்காளின் தாவணிக்குள் மறைந்து வந்த
முகமிருக்குது இங்கே
சுமந்து வந்த தம்பியின் உடலெங்கே?...

உயிரில்லை உடலில்லை
பொத்தி வைத்த கற்பும் நிலையில்லை

இது தலை எழுத்து..
வேறென்ன சொல்ல?
இனி பிறக்கும் குழந்தைகளின்
முதலெழுத்தாய் எதைச் சொல்ல?

சுமப்பதும் பெறுவதும் வலி என்றால்
தாய்மைக்கு அர்த்தம் இல்லை
இன்று சுமக்கிறோம் ரணங்களை
நாளை பெற்றெடுப்போம்
“தமிழ் ஈழமாக”..










நசித்தவனே ஞாபகங்கொள்...
புதைந்தது அனைத்தும் சதைகள் அல்ல
விதைகள்
ஒவ்வொன்றும் சுமந்து வரும்
ஓராயிரம் விருட்சங்கள்
யுத்தப் பூக்கள் ஏந்தி.....

No comments: